Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி சர்வதேசத் தாய்மொழி நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தாய் மொழி மற்றும் பண்பாட்டுப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதும், அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஆண்டும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று (21.02.2026) கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில்,
நம் உயிருக்கு நேராம், சமூகத்தின் விளைவுக்கு நீராம், உரிமைச் செம்பயிருக்கு வேராம், உயர்வுக்கு வானாம், பிறவிக்குத் தாயாம், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன்.
தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன் எனக் குறிப்பிட்டுருந்தார்.
அதோடு காவி உடை அணிந்த நிலையில் திருவள்ளுவர் படத்தையும் அந்த பதிவில் இணைத்திருந்தார். இதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து திமுக எம்.பி கனிமொழி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
பாஜக மீதான விசுவாசம் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விமர்சனங்களுக்கு பின்னர் அந்த படத்தை எக்ஸ் தளத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி தற்போது நீக்கியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b