Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான அனுமதிச் சீட்டுகள் நாளை (பிப்ரவரி 23) வெளியிடப்படவுள்ளன.
இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குனர் கே.சசிகலா அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மார்ச் 2 முதல் 26 ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியர்) மார்ச் 2 முதல் 27 ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இத்தேர்வுகளை எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன. அதன் பிறகு, தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு, இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு மட்டுமே வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் அந்தந்தப் பள்ளிகளிலேயே அடுத்த வாரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM