Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 22 பிப்ரவரி (ஹி.ச.)
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த பிப்ரவரி 07ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு, இந்தியா உள்பட 8 அணிகள் முன்னேறியுள்ளன.
இன்று நடைபெறும் சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி சம பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான பிரத்தியேக ஆடை விற்பனையக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய அணி வீரர் நடராஜன் பங்கேற்று, ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன்,
நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இதனால் நிச்சயம் இந்த அணி மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று உறுதியாக நம்புகிறேன்.
அதேபோல் கூடிய விரையில் எனது உடல் தகுதியை மீட்டு இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து தனது கிரிக்கெட் அகாடமி குறித்து பேசிய நடராஜன்,
எங்களது கிரிக்கெட் அகாடமியில் அண்டர் 13 முதல் பல பிரிவுகளில் வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
தற்சமயம் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்னும் சில காலங்களில் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி, அதிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
இந்திய அணிக்காக கடந்த 2020-21ஆம் ஆண்டுகளில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நடராஜன் அறிமுகமாகி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருந்தார்.
ஏனெனில் ஒரே தொடரில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக அறிமுகமான முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.
அதன்படி அவர் ஒரு டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் காயம் மற்றும் உடல் தகுதி காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நடராஜான், தற்போது வரையிலும் உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN