Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)
வரும் சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் கடந்த முறை இடம் பெற்றுள்ள கட்சிகள் தொடர்வதுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் புதிதாக இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி கட்சிகளுடன் இன்று முதல் திமுக குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையை நடத்துகிறது.
முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் சென்னையில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக குழுவுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் தலைமையில் பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபூபக்கர், பொருளாளர், எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், முன்னாள் எம்பி எம்.அப்துல் ரஹ்மான், கே.நவாஸ் கனி எம்.பி. ஆகிய 5 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.
கலைஞர் இருந்த போது சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியுடன் தான் பேச்சுவார்த்தையை தொடங்குவார்.
அந்த முறையை இப்போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற கூட்டணி கட்சிகளும் அடுத்தடுத்த நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட உள்ளன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட முஸ்லீம் லீக், அனைத்திலும் தோற்றது.
அதனால் இந்த முறை அந்த கட்சிக்கு 2 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b