Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ள நிலையில், இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதைச் சார்ந்த தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் பூமத்தியரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உட்பட 4 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் 25-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM