Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 பிப்ரவரி (ஹி.ச.)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு சிறந்த தலைவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி பதவி ஏற்ற பின்பு, மனதின் குரல் (Mann Ki Baat) எனும் தலைப்பின் கீழ் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும், வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதனை தொடர்ந்து, இன்று 131-வது பகுதியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஒரு பிரபலமான தலைவர் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி உரையாற்றுகையில்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மக்களால் போற்றப்பட்ட ஒரு உன்னத தலைவர். அவருடனான நட்பு, என் மனதில் பசுமையாக நிலைத்திருக்கிறது.
ஜெயலலிதா செய்த சாதனைகள் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் பெண் சக்தியின் அடையாளமாக விளங்கினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பிப்ரவரி 24ஆம் தேதி அவரது பிறந்தநாள். இன்றும் நான் தமிழ்நாட்டிற்கு செல்லும் போது, தமிழக மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பை உணர்கிறேன். ஜெயலலிதாவைப் பற்றி பேசும்போது, மக்களிடையே ஒருவித புத்துணர்வைக் காண முடிகிறது.
நான் குஜராத் முதல்வராகப் பதவியேற்றபோது, எனது பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். நான் முதல்வராக இருந்தபோது, குஜராத் மாநிலத்திற்கு பல உதவிகளைச் செய்தார். அவர் தேசத்தின் மீது மிகுந்த பற்று உடையவராக இருந்தார்.
என்று கூறினார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவை பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் புகழ்ந்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM