Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)
சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள சூழலில், தமிழக அரசியல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக மாறி வருகிறது. குறிப்பாக தமிழக அரசியலில் முதல் முறையாக தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திமுக கூட்டணியுடன் கைகோர்க்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகி குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
அரசியலில் யார் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது நிரந்தர எதிரியும் கிடையாது.
இதனை சொல்லிக் கொடுத்ததே கலைஞர் கருணாநிதி தான். அதுபோல தான் தேமுதிக திமுகவுடன் இணைந்துள்ளது.
ஒருவேளை விஜயகாந்த் உயிருடன் இருந்திருந்தால், இந்த கூட்டணி அமைந்திருக்காது. தற்போது அவர்கள் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.
அது அவர்களின் விருப்பம். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை நினைத்தால் பாவமாக உள்ளது. தன்னை யாராவது சேர்த்துக் கொள்வார்கள் என முயன்று வருகிறார்.
திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி இன்னும் உறுதியானதாகவே தெரியவில்லை.
அந்த கட்சிகள் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. ஏன் காங்கிரஸ் கட்சிக்குள்ளே விரிசல் ஏற்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. இவர்கள் எப்படி மாதம்தோறும் ரூ.2,000 கொடுக்கப் போகிறார்கள்? பொய் சொல்லலாம், ஆனால் வாய்க்கு வந்தபடி பொய் சொல்லக்கூடாது.
தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு முறையும் திமுக இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, வாகனங்கள், பணம், டிவி, லேப்டாப் என அனைத்தையும் பொதுவெளியிலேயே கொடுக்கிறார்கள். அதை காவல்துறையும் கண்டு கொள்வதில்லை.
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர். தொகுதிப் பங்கீடுகள் பலகட்டப் பேச்சுவார்த்தைக்கு பிறகு அறிவிக்கப்படும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது முக்கியமில்லை. எந்த இடத்தில் நின்று வெற்றி பெறுகிறோம் என்பது தான் முக்கியம்.
கூட்டணிக்குள் எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என இன்னும் முடிவாகவில்லை. அதன் பிறகு தான் நான் போட்டியிடுகிறேனா, இல்லையா என்பதை சொல்ல முடியும். அதேசமயம் எங்களுக்கு சீட்டு வழங்கினால்தான் வேலை செய்வோம் என்பதெல்லாம் கிடையாது.
பிரதமர் மோடியின் நல்ல திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த நோக்கம் மட்டும்தான் எங்களிடம் உள்ளது என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN