Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கள் அடுத்த மாதம் (மார்ச்)
11-ந்தேதி தொடங்குகிறது. 10 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வுகளை நாளை முதல் வருகிற 28-ந்தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் கருத்தியல் தேர்விற்கு 75 மதிப்பெண்களும், செய்முறைத்தேர்விற்கு 25 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியல் மற்றும் வருகைப்பதிவு பட்டி யலை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து, நாளை முதல் 28-ந்தேதி வரை செய்முறை தேர்வுகளை நடத்த வேண்டும்.
இதில், செய்முறை தேர்வு மையங்களாக செயல்படாத பள்ளிகள், தேர்வர் களின் வெற்று மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வருகைப்பதிவு பட்டியல்களை சம்பந்தப்பட்ட செய்முறை தேர்வுமைய பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்க வேண்டும். செய்முறை தேர்வை பொறுத்தவரை இயல் அறிவியலில் உள்ள இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை ஒரு மணிநேரத்திற்கும், உயிர் அறிவியலில் உள்ள தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை ஒரு மணிநேரத்திற்கும் என்று மொத்தம் 2 மணி நேரம் நடத்த வேண்டும்.
காலை 9 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகலில் 2 மணி முதல் 4 மணி வரையும் இரு வேளைகளில் நடத்தப்பட வேண்டும். இயல் அறிவிய லில் 10 மதிப்பெண்கள். உயிர் அறிவியலில் 10 மதிப்பெண்கள் மற்றும் அகமதிப்பீட்டிற்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். அனைத்து மாணவர்களும் அறிவியலுக்கான செய்முறை தேர்வு எழுத வேண்டும்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் விருப்பப்பட்டால், செய்முறை தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரி பள்ளி தலைமையாசிரியரிடம் கடிதம் சமர்ப்பித்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம்.
செய்முறைத் தேர்வு முடிவுற்ற பின்னர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து செய்முறை தேர்வுமைய பள்ளிகளிலிருந்தும் மதிப்பெண் பட்டியல்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 2-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b