தவெக தலைவர் விஜய்யின் தலைமையில் வேலூரில் நாளை நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் - முன்னேற்பாடுகள் தீவிரம்
வேலூர், 22 பிப்ரவரி (ஹி.ச.) வேலூர் மாட்டம், அகரம்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நாளை (பிப்ரவரி 23) நடைபெறவுள்ளது. முதலில் மக்கள் சந்திப்புக் கூட்டமாக நடத்த திட்டமிடப்பட்டு, 25,000 பேர் வரக்கூடும் என்று தெரிவ
தவெக தலைவர் விஜய்யின் தலைமையில் வேலூரில் நாளை நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் - முன்னேற்பாடுகள் தீவிரம்


வேலூர், 22 பிப்ரவரி (ஹி.ச.)

வேலூர் மாட்டம், அகரம்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நாளை (பிப்ரவரி 23) நடைபெறவுள்ளது.

முதலில் மக்கள் சந்திப்புக் கூட்டமாக நடத்த திட்டமிடப்பட்டு, 25,000 பேர் வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அதற்கேற்ப அகரம்சேரியில் 33 ஏக்கர் பரப்பளவு நிலத்தை சமன்செய்து ஏற்பாடு நடைபெற்று வந்தது.

கூட்டம் நடத்த உள்ள இடத்தை காவல் கண்காணிப்பாளர் என்.யு.சிவராமன் ஆய்வு செய்ததுடன், காவல் துறை சார்பில் தவெகவினருக்கு 20 நிபந்தனைகள் அடங்கிய நோட்டீஸ் அளித்து எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்கவும் கோரப்பட்டது. அதற்கு தவெக சார்பில் பதில் அளித்திருந்தனர்.

இந்நிலையில், மக்கள் சந்திப்பு கூட்டத்தை திடீரென நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக மாற்றி தவெக சார்பில் வியாழக்கிழமை அறிவித்ததுடன், இக்கூட்டத்தில் 4,900 போ் மட்டுமே பங்கேற்பர், அவர்களுக்கு க்யூ.ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால் காவல் துறை அறிவுறுத்தலின்பேரில் கூட்டம் நடைபெறும் இடத்தில் மேற்கூரைகளும், இருக்கைகளும், 50,000 தண்ணீா் பாட்டில்கள், 10 இடங்களில் தலா 6,000 லிட்டா் கொண்ட குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

கூட்டம் நடைபெறும் பகுதியில் 30 மருத்துவர்கள், 100 செவிலியர்கள், 100 மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய 10 மருத்துவக் குழுக்களும், 15 ஆம்புலன்களும் தயார் நிலையில் இருக்கும் என்றும், பாதுகாப்பாக கூட்டத்தை நடத்தி முடிக்க 50 பெண்கள் உள்பட 500 தன்னார்வலர்களும் களத்தில் செயலாற்றுவர்கள் என்றும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தன்னார்வலர்களுக்கு ஓய்வுபெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா பாதுகாப்பு பயிற்சிகளை அளித்தார்.

இதனிடையே, விஜய் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தையொட்டி 900 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அகரம் சேரியில் கூட்டம் நடைபெறும் இடம் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளதால், அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலும், சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் தடையின்றி சென்றுவர ஏற்பாடு செய்யப்படும். எனினும், அகரம்சேரி - பள்ளிக்குப்பம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதிப்படுவர், மற்றவர்கள் கட்டாயமாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தவெக தலைவர் விஜய் அகரம்சேரிக்கு சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வரஉள்ளதால், அவரது வாகனத்துக்கு பின்னால் அடையாள அட்டை இல்லாதவர்கள் யாரும் வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b