Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)
2026 - 2029 ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின்
நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல், சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.
தயாரிப்பாளர் சங்க சட்ட விதிமுறைகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 1 இணைச் செயலாளர், 26 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிடுகின்றனர். இந்த முறை இராம நாராயணன் அணி மற்றும் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் 1524 பேர் ஓட்டுரிமை பெற்றுள்ள உறுப்பினர்கள் ஆவர்.
இராம நாராயணன் அணியில் தலைவர் பதவிக்கு முரளி ராமசாமி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். செயலாளராக டி.டி.ராஜா, சௌந்திரபாண்டியன், துணைத் தலைவர்களாக விஜய் முரளி, மதியழகன், பொருளாளராக சி.வி.குமார், ஜாய், இணைச் செயலாளராக தயா பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 26 பேர் போட்டியிடுகின்றனர்.
நலம் காக்கும் அணியில் தலைவர் பதவிக்கு தமிழ்க் குமரன் போட்டியிடுகிறார். செயலாளராக ராதாகிருஷ்ணன், கமீலா நாசர், துணைத் தலைவர் பதவிக்கு கமலக்கண்ணன், ஆர்கே சுரேஷ், பொருளாளராக சுபாஷ் சந்திர போஸ், இணை செயலாளராக சுஜாதா விஜயகுமார் போட்டியிடுகின்றனர்.
மற்றும் 26 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதுதவிர சுயேட்சை வேட்பாளராகவும் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு மன்னன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். மேலும் கதிரேசன், ஜேஎஸ்கே சதீஷ்குமார், உள்ளிட்டோரும் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b