அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை,திமுக தமிழை வளர்க்கும் லட்சணம் இதுதானா? - அன்புமணி கேள்வி
தமிழ்நாடு, 23 பிப்ரவரி (ஹி.ச) அண்ணா பல்கலைக் கழகம் குறித்து தமிழக அரசை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல்
அன்புமணி


தமிழ்நாடு, 23 பிப்ரவரி (ஹி.ச)

அண்ணா பல்கலைக் கழகம் குறித்து தமிழக அரசை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் படிப்பில் தமிழரும் தொழில்நுட்பமும் என்ற பாடத்தைக் கற்பிப்பதற்கு உதவிப் பேராசிரியர்கள் ஒருவர் கூட இல்லை.

ஆசிரியர்களே இல்லாத நிலையில், இன்று தொடங்கியுள்ள அகமதிப்பெண் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தை படிக்காமலேயே தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்களைக் கூட நியமிக்காமல் உயர்கல்வியை திமுக அரசு சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் தமிழை அறிமுகம் செய்வதாகக் கூறிய திமுக அரசு, முதலாமாண்டு மாணவர்கள் தமிழ் படிப்பதை 2021-22ஆம் ஆண்டில் கட்டாயமாக்கியது.

பொறியியல் படிப்பில் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்கிய திமுக அரசு, அதற்காக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட நியமிக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பாடங்களை நடத்துவதற்காக 328 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்களின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்து விட்டதாகக் கூறி கடந்த திசம்பர் மாதம் அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனால், கடந்த இரு மாதங்களாக பொறியியல் மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் நடத்தப்படவில்லை.

1965-ஆம் ஆண்டில் தமிழக மாணவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராகவும், அன்னைத் தமிழ் மொழியை பாதுகாப்பதற்காகவும் நடத்திய மொழிப்போரால் ஏற்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உணர்வைப் பயன்படுத்தி தான் 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், இன்று வரை அன்னைத் தமிழை பாதுகாக்கவும், வளர்க்கவும் திமுக துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

பொறியியல் படிப்பில் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்கி விட்டு, அப்பாடத்தை நடத்த தற்காலிக ஆசிரியர்களைக் கூட திமுக அரசு நியமிக்கவில்லை என்றால், அன்னைத் தமிழுக்கு திமுக எந்த அளவுக்கு துரோகம் செய்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இது தான் திமுக தமிழ் வளர்க்கும் லட்சணமா? அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்களை திமுக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam