Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 23 பிப்ரவரி (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். பிரசாந்த் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் இறுதி விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட இடைக்கால பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 10,76,278 ஆக இருந்தது. பின்னர் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முகாம்களில் புதியதாக 40,720 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் 7,087 பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்த நடவடிக்கைகளின் கீழ் 8,141 பதிவுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இறுதியாக வெளியிடப்பட்ட பட்டியலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 11,09,911 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 5,52,101 பேரும், பெண் வாக்காளர்கள் 5,57,600 பேரும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 210 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்காளர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 1,37,649 ஆண்கள், 1,41,044 பெண்கள் மற்றும் 69 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளிட்ட மொத்தம் 2,78,762 வாக்காளர்கள் உள்ளனர். ரிஷிவந்தியம் தொகுதியில் 1,35,292 ஆண்கள், 1,35,198 பெண்கள் மற்றும் 51 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து 2,70,541 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் 1,30,231 ஆண்கள், 1,32,859 பெண்கள் மற்றும் 46 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,63,136 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 1,48,929 ஆண்கள், 1,48,499 பெண்கள் மற்றும் 44 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட 2,97,472 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் மூலம் தேர்தல் பணிகள் மாவட்டத்தில் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், தகுதியான அனைவரும் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் தயாரிப்புகள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / ANANDHAN