கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் 1.22 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு
கோவை, 23 பிப்ரவரி (ஹி.ச.) கோவை மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, 2-வது முறையாக தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார் தலைமையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி கோவை ம
Covai


கோவை, 23 பிப்ரவரி (ஹி.ச.)

கோவை மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, 2-வது முறையாக தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார் தலைமையில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு அக்டோபர் 27, 2025 நிலவரப்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர் (SIR) சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளின் மூலம் வாக்காளர் பட்டியல் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. முதல்கட்ட திருத்தப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட முதல் வரைவு பட்டியலில் 6,50,590 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், முகாம்கள் மற்றும் நேரடி சரிபார்ப்பு நடவடிக்கைகள் மூலம் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்ட 2-வது வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக 1,64,528 பேர் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 42,313 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தமாக 1,22,205 வாக்காளர்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற திருத்த நடவடிக்கைகளின் பின்னர், கோவை மாவட்டத்தில் இறுதியாக மொத்தம் 5,28,385 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மாவட்டத்தின் மொத்த இறுதி வாக்காளர்கள் எண்ணிக்கை 26,96,813 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண் வாக்காளர்கள் 13,00,889 பேரும், பெண் வாக்காளர்கள் 13,95,396 பேரும் உள்ளனர். மேலும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 528 வாக்காளர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் துல்லியமாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் பணிகள் கட்டுப்பாட்டுடனும் திட்டமிட்ட முறையிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN