Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 23 பிப்ரவரி (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட இறுதி வாக்காளர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்கள் மற்றும் திருத்த நடவடிக்கைகளின் மூலம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதுடன், தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தமாக 5,27,947 இறுதி வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்த நடவடிக்கைகளின் போது 2,909 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் முன்பு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 1,65,979 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், இறுதி பட்டியலில் 1,72,979 வாக்காளர்கள் உள்ளனர். இதன் மூலம் அந்த தொகுதியில் 7,000 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் வரைவு பட்டியலில் 1,63,598 வாக்காளர்கள் இருந்த நிலையில், இறுதி பட்டியலில் 1,68,934 பேராக உயர்ந்துள்ளது. இதனால் 5,336 புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் முன்பு 1,80,815 வாக்காளர்கள் இருந்த நிலையில், இறுதி பட்டியலில் 1,86,034 பேராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 5,219 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதை பொதுமக்கள் சரிபார்க்க வேண்டுமெனவும், திருத்தம் தொடர்பான கோரிக்கைகள் இருந்தால் தேர்தல் அதிகாரிகளை அணுகலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் கட்டுப்பாட்டுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / ANANDHAN