Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 23 பிப்ரவரி (ஹி.ச)
திருநெல்வேலியில் இன்று (பிப்ரவரி 23, 2026) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறும் போது,
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து அவர் ஆவேசமாகப் பேசினார்.
செய்தியாளர் சந்திப்பின் தொடக்கத்தில் அவர் கூறியதாவது:
இன்று மாலை 6 மணி அளவில் தமிழகமெங்கும் வாழும் முருகப் பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும், வீதிகளிலும் விளக்கேற்றி 'கந்த சஷ்டி கவசம்' படிக்க வேண்டும் என்று ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளோம்.
இது எங்களது நீண்ட நாள் ஆசை.
குறிப்பாகத் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியாத சூழல் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் கூட, முருகப் பக்தர்கள் மத்தியில் ஒரு மனவருத்தம் நீடிக்கிறது.
எனவே, அந்த மனக்குறையைப் போக்கவும் இறைவனை வேண்டவும் இந்த விளக்கேற்றும் நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளோம்.
அரசியல் குறித்துப் பேசிய அவர்,
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றார்.
இந்தத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களது பிரதான வேண்டுதல்.
அதற்காகவே இந்த ஆன்மீகப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடுகளை மின்னல் வேகத்தில் முடித்து வருவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
அவர்கள் ஏற்கனவே கூட்டணியில் இருப்பவர்கள் தான். புதிதாக யாரும் சேரவில்லை. எனவே அதை மின்னல் வேகம் என்று சொல்ல முடியாது. சினிமாவில் வருவது போல அது மின்னல் போல வந்து மின்னல் போலவே மறைந்துவிடும். வரும் தேர்தலில் மக்கள் தான் உண்மையான முடிவை எடுப்பார்கள் என்று விமர்சித்தார்.
திமுக அமைச்சர்கள் மீதான நீதிமன்ற வழக்குகள் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன்,
அமைச்சர் நேரு உள்ளிட்ட பல அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குகள் உள்ளன.
நீதிமன்றமே சில அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லியுள்ளது. ஆனால் இந்த அரசு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது.
பிரதமருக்கு எதிராகத் தென்காசியில் பேசிய ஒரு முக்கியத் தலைவரை இதுவரை இந்த அரசு கைது செய்யவில்லை.
ஆனால் பாஜக-வினரைச் சிறிய காரணங்களுக்காகக் கூட உடனுக்குடன் கைது செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
பாஜக-வின் தொகுதிப் பங்கீடு குறித்துக் கேட்டபோது,
விரைவில் எங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி உரிய நேரத்தில் அறிவிப்போம்.
டிடிவி தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் எங்களுடன் இணைந்தே உள்ளனர்.
2026-ல் ஒரு பலமான மாற்றத்தை தமிழக மக்கள் பார்ப்பார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN