நீலகிரி வனப்பகுதியில் குடிநீர்த் தொட்டிகளை நிரப்பும் பணிகள் தீவிரம்
நீலகிரி, 23 பிப்ரவரி (ஹி.ச.) வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வன விலங்குகள் அதிகம் வாழக்கூடிய நீலகிரி மாவட்டத்தில் நீரோடைகள் மற்றும் நீரூற்றுகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீ
Nilgiris


நீலகிரி, 23 பிப்ரவரி (ஹி.ச.)

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வன விலங்குகள் அதிகம் வாழக்கூடிய நீலகிரி மாவட்டத்தில் நீரோடைகள் மற்றும் நீரூற்றுகளில் தண்ணீர் குறைந்து வருகிறது.

இதனால் வனவிலங்குகள் தண்ணீரின்றி தவிர்த்து வருகின்றன. ஆண்டுதோறும் கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படுவதை கருத்தில்கொண்டு வனத்துறை சார்பில் வன விலங்குகளுக்காக ஆங்காங்கே குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் விதமாகவும், வன விலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளில் நீலகிரி மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளானது, சீகூர் வனச்சரக ரேஞ்சர் சுரேஷ்பாபு தலைமையில், வன பணியாளர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீகூர் வனச்சரகமானது முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளுடன் இணைந்த முக்கியமான வனவிலங்கு வழித்தடமாக விளங்குகிறது. குறிப்பாக யானைகள், மான்கள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் இப்பகுதியில் உலா வருகின்றன.

இந்நிலையில், வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டிகளில், வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பும் பணி முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. வனத்துறையின் கண்காணிப்பின் கீழ், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி, தொட்டிகள் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளனவா என்பது பரிசோதிக்கப்பட்ட பின்னரே தண்ணீர் நிரப்பப்படுகிறது.

ஏற்கனவே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அதனை கருத்தில்கொண்டு, வனவிலங்குகள் தண்ணீர் தேடி மனிதர்கள் வசிக்கும் கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுப்பதும், மனித - வனவிலங்கு மோதல் சம்பவங்களை குறைப்பதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் நாட்களிலும் தொடர்ந்து, வனப்பகுதியில் உள்ள அனைத்து குடிநீர்த் தொட்டிகளும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, தேவைக்கேற்ப தண்ணீர் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும், தமிழ்நாடு வனத்துறை வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN