Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 23 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் அத்துமீறிக் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
பாம்பன் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகையும் அதிலிருந்து 12 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.
தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக அண்மையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
அதில், மீனவர்கள் கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாகவும் உள்ளது.
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம்கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
இது தமிழக கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
எனவே, இந்த நீண்ட கால பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக் குழு அல்லது மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கச்சத்தீவு திருவிழா நடைபெற உள்ள நிலையில் தமிழக மீனவர்கள்12 பேர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என ஏஐடியுசி மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏஐடியுசி மீனவர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை, கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அத்துமீறிச் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை மீனவக் கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகள் கொண்ட கூட்டுக் குழு அமைத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மீனவ மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam