தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு


சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டிருந்தன.

நீக்கப்பட்ட 97.37 லட்சம் பெயர்களில், உயிரிழந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் எனக் கணக்கிடப்பட்டது.

இதனையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ம் தேதி முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.

அதேபோல், இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தமாக 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது.

வரைவு வாக்காளர் பட்டியலில், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என்று காட்டப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

ஆனால் சுமார் 23 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி கணக்கிடும்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர்ந்து, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது.

பிற்பகல் 2.30 மணிக்கு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிடுகிறார்.

மாவட்டங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் காலை 10 மணிக்கு மேல் வெளியிடப்பட உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM