வேலூரில் தவெக சந்திப்பு கூட்டம் - சென்னையிலிருந்து தவெக தலைவர் விஜய் காரில் புறப்பட்டார்
சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.) வேலூரில் உள்ள அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 4 ஆயிரத்து 900 நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுக்கு கியூ.ஆ
வேலூரில் தவெக  சந்திப்பு கூட்டம் - சென்னையிலிருந்து தவெக தலைவர் விஜய் காரில் புறப்பட்டார்


சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.)

வேலூரில் உள்ள அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் 4 ஆயிரத்து 900 நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

அவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். விஜய் வருகையையொட்டி அங்கு பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

வெயில் காரணமாக மேற்கூரை மற்றும் அமர்வதற்கு நாற்காலி வசதி செய்யப்பட வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்ததால் 4,900 பேர் அமரும் வகையில் 600 அடி நீளத்தில் 140 அடி அகலத்தில் பிரமாண்டமான மேற்கூரை அமைக்கும் பணி உள்ளிட்ட ஏற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது. இதுதவிர த.வெ.க. சார் பில் 1,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட காவல்துறை சார்பில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பை மீறி தொண்டர்கள் நிகழ்ச்சிக்கு செல்வதை தடுக்கும் வகையில் 3 அடுக்குகளாக தகர ஷீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய், சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வேலூர் வருகை தர உள்ளார்.

நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் பிரசாரப் பேருந்தின் மேல் நின்று பேசுகிறார் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

மேலும் அந்த இடத்துக்கு அவர் வர தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் கூறினர்.

இதனிடையே சென்னையில் இருந்து அகரம் சேரிக்கு சாலை மார்க்கமாக வரும் விஜய்யின் வாகனத்துக்கு பின்னால் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் வாகனங்களில் பின்தொடராமல் இருக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவரது வாகனத்தை பின் தொடர பாஸ் வழங்கப்பட்ட குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் போலீசார் அனுமதி அளிக்க உள்ளனர்.

இந்த நிலையில், வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க நீலாங்கரை இல்லத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் காரில் புறப்பட்டார்.

Hindusthan Samachar / vidya.b