Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச)
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சூளுரையை நம் மனதிலே தாங்கி, கழக ஆட்சியை மீண்டும் மலரச் செய்வோம் என்றும் தமிழ் நாட்டின் பெருமைகளை நிலைநாட்டி, நல்லாட்சி வழங்கிட உறுதி ஏற்போம் என்றும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி ஏற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையும்; இந்த இயக்கத்தை தன் வாழ்நாளின் இறுதி வரையில் அரண் போல் கட்டிக் காத்த புரட்சித் தலைவி அம்மா அவர்களையும், என்றென்றும் இதயத்திலே தெய்வமாக மதித்துப் போற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம்.
நம் உள்ளங்களிலும், தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கும் 'தங்கத் தாரகை' இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், 'அம்மா அவர்களின் புகழ் ஓங்குக' என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் எதிரொலிக்கிறது.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், அனைத்து நேரங்களிலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம் போல் உயர்ந்து விளங்கிய புரட்சித் தலைவி அம்மா அவர்களை தமிழ் நாட்டு மக்கள் ஒரு நாளின் ஒவ்வொரு நகர்விலும் நினைத்துப் பார்க்கின்றார்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்திலும், அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட, எனது தலைமையிலான கழக ஆட்சிக் காலத்திலும், மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம், ஏராளம்.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்குப் பிறகு, நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மக்கள் பணிகளை தொய்வில்லாமல் ஆற்றி வருகின்றது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், புரட்சித் தலைவரின், புரட்சித் தலைவி அம்மாவின் பேரியக்கத்தை, ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் நாட்டு மக்களின் நலன்களை பேணிப் பாதுகாத்திட, மாநில அரசை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் மிகச் சிறந்த நிர்வாகியாகவும், தெளிவான சிந்தனையோடும், தெளிவான திட்டங்களைக் கொண்டு வந்து அதை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதிலும், தமிழ் நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், ஒரு தீர்க்கதரிசியாகவும் திகழ்ந்தவர்தான் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூகப் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்திய நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த விடியா தி.மு.க. அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது.
தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது,மத்தியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளைக் கொடுத்தும், மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டு, பல்வேறு நெருக்கடிகளைத் தந்தபோதிலும், தனது மதிநுட்பத்தாலும், நிர்வாகத் திறமையாலும் அனைத்து சாவல்களையும் எதிர்கொண்டு எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை வழங்கியவர்.
நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்களின் ஆசியோடு செயல்பட்ட கழக அரசும் அந்த முயற்சியில் தொய்வின்றி செயலாற்றியது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், இந்த விடியா தி.மு.க. அரசு தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றிடவும், இருமொழிக் கொள்கைகளை நிலைநாட்டிடவும், திறனற்ற அரசாக இருந்துகொண்டிருக்கிறது.
விடியா தி.மு.க. அரசின் இந்த அலங்கோல ஆட்சியில் நாள்தோறும் தமிழ் நாட்டில், பெண் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும், காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெண் காவலர்களுக்கும்கூட பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது. தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் கள்ளச் சாராயம், போதைப் பொருள் புழக்கம், பட்டப் பகலில் அரங்கேறும் கொலை, கொள்ளை என சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உண்மைகளைச் சொல்பவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்படுகிறது.
இந்த அவலங்களையெல்லாம் மாற்ற வேண்டும்; தமிழ் நாடு அமைதிப் பூங்காவாய் திகழ வேண்டும், தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீண்டும் மலர வேண்டும்.
தமிழக மக்களின் நலன் கருதி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற உயரிய லட்சியத்துடன் நான் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணங்களின்போது, நான் செல்லும் இடங்களில் எல்லாம் அலைகடல் எனத் திரண்டு வரும் கழக உடன்பிறப்புகளையும், தமிழ் நாட்டு மக்களையும் பார்க்கின்றபோது, கழக ஆட்சியே மீண்டும் மலரப் போகிறது என்கிற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன்னதைப் போல, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது. “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள்.
அம்மா அவர்களின் பிறந்த நாளை கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். அந்த எழுச்சி, வருகின்ற 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் வெற்றியை பிரதிபலிக்கின்ற வகையில் அமைய வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள வெற்றிக் கூட்டணியில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டாலும், அவர்களின் வெற்றிக்காக முழுமூச்சுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ