கேரளாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீது தாக்குதல் - போலீஸ் விசாரணை
சேலம், 24 பிப்ரவரி (ஹி.ச.) கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் காஞ்சிகோட்டில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு கல்வி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த மாணவி மீது மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம்
Kerala College


சேலம், 24 பிப்ரவரி (ஹி.ச.)

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் காஞ்சிகோட்டில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு கல்வி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த மாணவி மீது மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், அங்குள்ள ஐஐடியில் டேட்டா சயின்ஸ் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவி தனது நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திற்குச் சென்றுகொண்டிருந்த போது திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரும்பு பொருளால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் மாணவியின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தக் காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த மாணவியை உடனடியாக மீட்டு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாலக்காடு கசாபா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபரை கண்டறிவதற்காக கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாணவி மீது கல்லூரி வளாகத்திற்குள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியையும் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தைக் கண்டித்து சக மாணவர்கள் இரவு நேரத்தில் கல்லூரி வளாகத்திலேயே ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தாக்குதல் நடத்திய நபரை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN