Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.)
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சில பகுதிகளில் பனிமூட்டம் தொடரக்கூடும்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாளை முதல் 27-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
28-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM