Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 24 பிப்ரவரி (ஹி.ச)
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர்.
கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக சுற்றுலா பயணிகள் நீலகிரி வருகின்றனர். கோடை காலத்தில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
5 நாட்கள் வரை நடைபெறும் இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள கோடை சீசனுக்காக தற்போது தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முராக நடைபெற்று வருகிறது.
மலர் கண்காட்சிக்காக தற்போது தாவரவியல் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் முதல் பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நாற்றுகள் அவைகள் வளரும் காலத்தை பொறுத்து நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், 35 ஆயிரம் தொட்டிகளிலும் கடந்த மாதம் முதல் நாற்று நடவு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. தற்போது நாள்தோறும் பூங்கா ஊழியர்கள் தொட்டிகளில் நாற்றுகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கோடை வெயில்,பனிப்பொழிவில் மலர் நாற்றுகள் பாதிக்காமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மலர் நாற்றுகள் வாடாமல் இருக்க நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாதம் இறுதி வாரம் முதல் பனியின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனியின் தாக்கம் குறைந்தால், தொட்டிகளில் வைக்கப்பட்டள்ள கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றப்படும். மேலும், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள நாற்றுக்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெரும்பாலான செடிகளில் மலர்களை காண முடியும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
Hindusthan Samachar / vidya.b