Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.)
கடந்த 4 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் ஐஐடி-யில் பயில தேர்வான மாணவர்களை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்!
கல்வியால் சிறக்கும் நமது அரசுப் பள்ளி மாணவர்களைச் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெற வைத்துப் பூரிப்படைகிறோம்
2021-22-இல் கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாடல் பள்ளிகள், இன்று 38 மாவட்டங்களிலும், தலா ரூ.50 கோடி மதிப்பீட்டில் 800 மாணவர்களுக்கான உறைவிட, உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
அதனால்தான், கடந்த 4 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர்களும், ஆதி திராவிடர் (37) மற்றும் பழங்குடியினர் (169) பள்ளிகளைச் சேர்ந்த 206 மாணவர்களும், 93 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில், 50 துறைகளில் மேற்படிப்பு பயிலுகின்றனர்.
அதில் 41 பேர் ஐஐடி களிலும், 22 பேர் முழு உதவித்தொகையுடன் வெளிநாடுகளிலும் பயில்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஐஐடி-யில் நுழைவதற்கான முதற்படியை அரசு மற்றும் மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 448 மாணவர்களும் - ஆதி திராவிடர் (13) மற்றும் பழங்குடியினர் (55) பள்ளிகளைச் சேர்ந்த 68 மாணவர்களும் வெற்றிகரமாகக் கடந்துள்ளனர்.
பெரும்பாலும் முதல் தலைமுறையினராகக் கல்விச் சாலைக்குள் நுழைந்த இந்த மாணவர்களின் கனவுகளை அடைவதற்குத் துணை நிற்கின்ற பெருமையோடு, இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் பலர் கல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, உன்னதமான உயரங்களை வாழ்வில் அடைந்திட வாழ்த்துகிறோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b