Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்தத் தடையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத,நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும்.
கடந்த 2014- ம் ஆண்டு நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.
நிலுவையில் உள்ள இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் சுதிர் குமார் அமர்வில் இன்று விசாரணைக் வந்தது.அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி இருந்தார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல,டெல்லி உயர்நீதிமன்றம், வைகோ ஆட்சேபனை மனுவை நிராகரித்ததுள்ளது என்றும் வைகோ பாதிக்கப்பட்ட நபர் அல்ல என்றும், அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது அவற்றை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என்றும் தெரிவித்தார்.
2014 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு காலவதிஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
அப்போது வைகோ, தான் விடுதலை புலிகள் ஆதரவாளர் என்றும், ஏற்கனவே தீர்ப்பாயத்தில் ஆஜராகியுள்ளேன், குறுக்கு விசாரணை நடத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டார்.
மேலும் விடுதலைப்புலிகள் போராட்ட வரலாற்றையும் விவரித்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 2024 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக்கூறி வைகோ வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam