Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 25 பிப்ரவரி (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் நடமாடுவதாகக் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.
கடற்கரையில் நடைபெற்ற சோதனையின் போது இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை போலீசார் கண்டறிந்தனர்.
அதனை ஆய்வு செய்தபோது தலா 35 கிலோ எடை கொண்ட 77 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. சர்வதேச சந்தையில் இந்த பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
போலீசார் வருவதைக் கண்ட கடத்தல் கும்பல், தங்களது பைபர் படகுடன் நடுக்கடலுக்குள் தப்பிச் சென்றுவிட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள் தருவைகுளம் கடல் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் தருவைகுளம் கடல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய கடத்தல் கும்பலைத் தேடும் பணியில் கடலோரப் பாதுகாப்புப் படை மற்றும் கடல் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தூத்துக்குடி கடலோரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b