தமிழக காவல் துறையில் புதிய மென்பொருள் ‘சிசிடிஎன்எஸ் 2.0’ சேவை - நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.) தமிழக காவல்துறையில் ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள சிசிடிஎன்எஸ் 2.0 எனும் புதிய மென்பொருள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. சிசிடிஎன்எஸ் 2.0 மென்பொருள் (ஏற்கெனவே 1.0 உள்ளது) காவல் துறையில் ஒரு மேம்பட்ட தொழில்நு
தமிழக காவல் துறையில் புதிய மென்பொருள் ‘சிசிடிஎன்எஸ் 2.0’ சேவை - நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழக காவல்துறையில் ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள சிசிடிஎன்எஸ் 2.0 எனும் புதிய மென்பொருள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

சிசிடிஎன்எஸ் 2.0 மென்பொருள் (ஏற்கெனவே 1.0 உள்ளது) காவல் துறையில் ஒரு மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இதில் சமுதாய சேவைப் பதிவேடு (சிஎஸ்ஆர்), முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) மற்றும் முதல்நிலை விசாரணை ஆகியவற்றைப் பதிவுசெய்ய இயலும்.மேலும் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, விசாரணை அறிக்கைகள் ஆகியவற்றை ஆன்லைனில் உடனடியாக நீதிமன்றத்துக்கு அனுப்ப முடியும்.

இதேபோல், சிசிடிஎன்எஸ் 2.0 மென் பொருள் குற்றவியல் நீதி அமைப்பின் மற்ற இணை அமைப்புகளான குற்ற வழக்கு தொடர்புத் துறை, சிறைத் துறை, தடயவியல் மற்றும் சுகாதாரத் துறையுடன் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது காவல் நிலையங்களின் பணியின் வேகத்தை விரைவுபடுத்தவும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் சிறந்த பொறுப்புணர்வை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மூத்த அதிகாரிகள் காவல் நிலையங்களில் செய்யப்படும் பணிகளை உடனுக்குடன் திறம்பட கண்காணிக்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் பூட்டிய வீடுகள் குறித்த தகவல்களை பதிவு செய்வது மற்றும் தனி அடையாளத்துடன் கூடிய பொருட்களை தேடுவது போன்றவற்றுக்கான சிறந்த வசதிகள் வழங்கப்படுகின்றன.

இந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள், ஆன்லைனில் புகாரைப்பதிவு செய்தல், சமுதாய சேவைப் பதிவேடு, முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆன்லைன் புகார் ஆகியவற்றின் தற்போதைய நிலையை அறிதல், கைது செய்யப்பட்ட நபரின் விவரங்களை அறிதல், காணாமல் போன மற்றும் அடையாளம் தெரியாத இறந்த நபர்களின் தகவல்களை தேடுதல், காவல் சரிபார்ப்பு மற்றும் தொலைந்த ஆவண அறிக்கை ஆகியவற்றைப் பெறுதல், விபத்து ஆவணங்களைப் பதிவிறக்குதல் ஆகிய சேவைகளும் பெறலாம்.

சிசிடிஎன்எஸ் (CCTNS) 2.0 மென்பொருள் மற்றும் டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு அமைப்பு ஆகிய இரு திட்டங்களும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அனைத்து காவல் சிறப்பு பிரிவுகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை

(26-ம் தேதி) இந்த புதிய மென்பொருள் சேவை தொடங்கி வைக்கிறார் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b