Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101) வயது மூப்பு காரணமாகப் பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
கடந்த 1ஆம் தேதி நல்லகண்ணு மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன்படி கடந்த 25 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று முன் தினம் (23.02.2026) இரவு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மூ. வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தோழர் நல்லகண்ணு தீவிர சிகிச்சையில் உள்ளார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
எளிய மக்களுக்கு அர்ப்பணித்த தலைவர் தற்போது இயற்கையோடு போராடுகிறார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை கம்யூனிஸ்ட் கட்சி காத்திருக்கும்.
அதன்பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி அறிவிக்கும்.
அதுவரை சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம்.
எனவே பொதுமக்கள், நல்லகண்ணு உடல்நிலை குறித்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம்.
மருத்துவமனை தரப்பில் இருந்து வரும் தகவல் தான் அதிகாரப்பூர்வமானது ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b