Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் இந்த ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. விரைவில் இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிராம மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்.ஐ.ஆர்) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் (மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள்) நேற்று முன் தினம் (23.02.2026) வெளியிட்டனர்.
அதன் தொடர்ச்சியாக ஒட்டுமொத்த தமிழக அளவிலான இறுதி வாக்காளர் பட்டியலைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்த நிலையினை மதிப்பீடு செய்யும் பணி, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள்) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெற இருக்கிறது. அதற்காக அவரும், அவரது குழுவினரும் சென்னைக்கு வருகை தர உள்ளனர்.
இதற்காக, இன்று (பிப்ரவரி 25-ம் தேதி) காலை 9 மணியளவில் சென்னைக்கு விமானம் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், ஆணையர்கள் சுக்பிர்சிங் சாந்து, விவேக் ஜோஷி மற்றும் துணை ஆணையர்கள் மானேஷ் கார்க், பானு பிரகாஷ், பவன்குமார் சர்மா, சஞ்சய்குமார், ஆசிஷ் கோயல் ஆகியோர் வருகை தருகின்றனர். அவர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரவேற்கிறார்.
பின்னர், அவர்கள் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். புதுச்சேரியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகளை அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.
நாளை (பிப்ரவரி 26), தமிழகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
பின்னர், பிற்பகலில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், டி.ஐ.ஜி., ஐ.ஜி. உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
நாளை மறுநாள் (பிப்ரவரி 27) காலையில், மத்திய அரசின் அனைத்து விசாரணை முகமைகளின் அதிகாரிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் அழைத்து ஆலோசனை நடத்துவார். அதன் பிறகு, நண்பகலில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிப்பார். அப்போது, தமிழகத்தில் தேர்தல் தயார் நிலை குறித்து அவர் கருத்து தெரிவிப்பார்.
அதன் பின்னர் டெல்லி திரும்பும் அவர்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடத்தும் தேதியை அறிவிக்கும் தினத்தை முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b