Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 25 பிப்ரவரி (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ புதூர்மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வருகின்றனர்.
விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தினமும் காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன.
பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வகையில் பால்குடம், அலகு குத்துதல், முள் நடை உள்ளிட்ட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடத்தப்பட்ட நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவை முன்னிட்டு பாலக்கோடு நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதுடன், மருத்துவம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ள ஸ்ரீ புதூர்மாரியம்மன் திருவிழா அந்த பகுதி முழுவதும் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN