Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாட்டில், வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அதிக பனிப்பொழிவு நிலவியது. இதனைத் தொடர்ந்து, கோடைக்காலம் மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த வருடத்தை விட அதிகரிக்கும் எனவும், அக்டோபர் மாதம் வரை வெப்பம் நீடிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்த வருடம் கோடைக்காலம் மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பிக்கும். முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் முதல் மே வரையிலான கோடை காலத்தில், 12 வாரங்களில் சுமார் 4 முதல் 6 வாரங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, வறண்ட வானிலையும் நிலவும். சுமார் 2 வாரங்கள் வெப்பசலன இடிமழையும், 3 முதல் 4 வாரங்கள் இயல்பான வெப்பநிலையையும் கொண்டிருக்கும். வெப்பசலன மழை மார்ச் மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கும்.
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கினாலும், அதே மாதத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வெப்பம் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் இரண்டாவது வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இது, மழைப்பொழிவை குறைக்கக்கூடிய 'எல்நினோ' அமைப்பின் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.
2020, 2021, 2022, 2024, 2025 ஆகிய வருடங்கள் மழை தரக்கூடிய ஆண்டுகளாக இருந்தன. 2027-ம் வருடம் உலகளாவிய எல்நினோ ஆண்டாக இருக்கும் காரணத்தால், உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் அடுத்த வருடம் (2027) மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, 2026-ம் ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் ஆண்டாகவும், 2027-ம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவும் இருக்கும்.
என்று அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM