Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 பிப்ரவரி (ஹி.ச.)
அமெரிக்காவுடன் எட்டப்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து, வெனிசுலாவில் இருந்து தலா 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய்யுடன் கூடிய பெரிய சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார். இதன் காரணமாக, இந்தியாவின் மீது கூடுதல் வரிகளும் விதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அதிபர் டிரம்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதலை குறைத்துக் கொள்ள இந்தியா சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
மேலும், வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்ய இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ரிலையன்ஸ், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹெச்பிசிஎல் மிட்டல் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன.
வெனிசுலாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியா போன்ற உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் கண்காணிப்பில் எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வெனிசுலாவிலிருந்து தலா 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு, 3 சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
இந்த கப்பல்கள் மார்ச் மாதத்தில் இந்தியாவை வந்தடைய உள்ளன.
2019ம் ஆண்டு அமெரிக்க தடைகளுக்கு முன்பு, வெனிசுலா கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் 3வது பெரிய நாடாக இந்தியா இருந்தது.
தற்போது, மீண்டும் எண்ணெய் கொள்முதல் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM