பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் - அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்
புதுடெல்லி, 25 பிப்ரவரி (ஹி.ச.) அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களுக்கான மாநாடு கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே மிக உயர்ந்த அளவிலான நட்புறவு நி
பிரதமர் மோடி  இன்று இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் - அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்


புதுடெல்லி, 25 பிப்ரவரி (ஹி.ச.)

அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களுக்கான மாநாடு கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே மிக உயர்ந்த அளவிலான நட்புறவு நிலவுவதாக தெரிவித்தார்.

மேலும், அனைத்து விதமான ஒத்துழைப்புகள் பற்றியும் நாங்கள் கலந்தாலோசிக்க உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா ஒரு சிறிய நாடு அல்ல என்றும், 140 கோடி மக்கள் தொகையை கொண்ட அது ஒரு மிகப் பெரிய, சக்தி வாய்ந்த மற்றும் அதிக பிரபலம் வாய்ந்த நாடு என்றும் குறிப்பிட்டார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, நெசட் என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு நாள் பயணத்தில், இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நலன்கள் குறித்து அவர் விவாதிக்கவுள்ளார்.

இஸ்ரேலுக்கான அவருடைய இந்த பயணம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்பு, 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் இஸ்ரேலுக்கு முதல் பயணம் மேற்கொண்டார். இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட முதல் பிரதமர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றார்.

கடந்த ஆண்டு இரு தரப்பிலும் அமைச்சர்கள் அளவிலான பரஸ்பர பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதே போன்று, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சக அளவில் டெல் அவிவ் நகரில் கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேலின் கூட்டு பணிக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

அதோடு, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றும் அதே நவம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று (புதன்கிழமை) இஸ்ரேல் செல்கிறார்.

இந்த பயணத்தின்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர்.

காசா நிலவரம் குறித்தும் அவர்கள் ஆலோசிக்கிறார்கள்.

இன்று இரவு, பிரதமர் மோடிக்கு நெதன்யாகு விருந்து அளிக்கிறார்.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோக்கையும் மோடி சந்தித்து பேசுகிறார்.

Hindusthan Samachar / JANAKI RAM