பொன்முடி மீதான செம்மண் குவாரி தொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
விழுப்புரம், 25 பிப்ரவரி (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் தாலுகாவின் பூத்துறை கிராமத்தில் அமைந்திருக்கும் செம்மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, அதாவது 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் அதிகப்படியாக செம்மண் எடுத்ததன் விளைவ
பொன்முடி  மீதான செம்மண் குவாரி தொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு


விழுப்புரம், 25 பிப்ரவரி (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் தாலுகாவின் பூத்துறை கிராமத்தில் அமைந்திருக்கும் செம்மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, அதாவது 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் அதிகப்படியாக செம்மண் எடுத்ததன் விளைவாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் உட்பட 8 நபர்கள் மீது கடந்த 2012-ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்துவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் நிறைவு பெற்றது. இதில் 57 சாட்சிகளில் 30 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

பொன்முடி எம்.எல்.ஏ., பொன்.கவுதமசிகாமணி, கோதகுமார், ராஜமகேந்திரன் ஆகிய நால்வரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் தி.மு.க. வழக்கறிஞர்கள் ஆஜராகி, அவர்கள் ஆஜராகாத காரணத்திற்கான மனுவை சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஏற்கெனவே வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து வாதாடினார்.

அதனைத் தொடர்ந்து பொன்முடி எம்.எல்.ஏ. உட்பட 7 பேரின் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி பதில் வாதம் செய்து முடித்தனர்.

அதன் பிறகு அரசு தரப்பில் பதில் வாதம் செய்வதற்காக வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / JANAKI RAM