இளைஞர் காங்கிரஸ் தலைவரின் கைது நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி கண்டனம்
புதுடெல்லி, 25 பிப்ரவரி (ஹி.ச.) புதுடெல்லியில் அமைந்திருக்கும் பாரத் மண்டபத்தில், சென்ற வாரம் ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றபோது, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திடீரென ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஒப்பந்தம் ஒ
இளைஞர் காங்கிரஸ் தலைவரின் கைது நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி கண்டனம்


புதுடெல்லி, 25 பிப்ரவரி (ஹி.ச.)

புதுடெல்லியில் அமைந்திருக்கும் பாரத் மண்டபத்தில், சென்ற வாரம் ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றபோது, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திடீரென ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஒப்பந்தம் ஒரு சமரசமான முறையில் மேற்கொள்ளப்பட்டது போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிய சில நொடிகளில், அவர்கள் அணிந்திருந்த சட்டைகளைக் களைந்து எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய்பானு சிப்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, உதய்பானுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:

உண்மையை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் அமைதியான மற்றும் அகிம்சை வழியிலான எதிர்ப்பு என்பது நமது பெருமைமிக்க பாரம்பரியமாகும். இது மகாத்மா காந்தியிடமிருந்தும், நமது இந்திய முன்னோர்களிடமிருந்தும் பெறப்பட்டதாகும்.

உலகளாவிய அழுத்தத்திற்கு இணங்கி, இந்தியாவின் நலன்களை சமரசம் செய்துகொண்ட பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது இந்தியர்களின் நலனுக்காகவே.

பொதுமக்களுக்காக குரல் எழுப்பியதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது, அதே சமயம் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இளைஞர் காங்கிரஸின் துணிச்சல் மிக்க வீரர்களுடன் காங்கிரஸ் கட்சி உறுதியாக துணை நிற்கும்.

என்று அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM