Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 25 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளது.
தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.
அவ்வகையில், அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணைந்தது.
அதே சமயத்தில், அதிமுக ஒருங்கிணைப்பு என்ற கோஷத்தை ஓ.பன்னீர் செல்வம் தொடங்கியபோது, அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் எடுத்தனர். ஆனால், சசிகலாவின் முடிவுக்கு மாறாக, டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்தார்.
அதே நேரத்தில், சசிகலா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதில் பரபரப்பான சூழ்நிலை இருந்தது. மேலும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நலத்திட்ட விழா நடைபெறும் என்று சசிகலா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட விழாவில் சசிகலா நேற்று பங்கேற்றார். இந்த நிகழ்வில் பேசிய சசிகலா, புதிய கட்சி ஒன்றை தொடங்கியிருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களிலான கொடியில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள கட்சிக் கொடியை சசிகலா அறிமுகப்படுத்தினார்.
மேலும், ஒன்பது ஆண்டுகளாக அமைதியாக இருந்தது போல் இனி தன்னால் இருக்க முடியாது என்று கூறிய சசிகலா, கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் சசிகலா புதிய கட்சியை தொடங்கிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM