Enter your Email Address to subscribe to our newsletters

கொழும்பு, 25 பிப்ரவரி (ஹி.ச.)
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதில், நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அந்த அணியில் சஹிப்சதா பர்ஹான் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய அவர் அரைசதம் எட்டினார். பாபர் அசாம், பகர் ஜமான் ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர்.
முடிவில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டாசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை அடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் சால்ட் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து பட்லர் 2 ரன்களும், பெத்தேல் 8 ரன்களும், பாண்டன் 2 ரன்களும், சாம் கரன் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் ஹேரி புரூக் தனது அரைசதத்தை பதிவு செய்தார். வில் ஜாக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இங்கிலாந்து அணியின் இந்த ஜோடி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஹேரி புரூக் 50 பந்துகளில் சதம் அடித்த நிலையில், 100 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வில் ஜாக்ஸ் 28 ரன்களும், அடுத்து களம் இறங்கிய ஓவர்டன் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
வெற்றிபெற 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில் இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷாகீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
Hindusthan Samachar / JANAKI RAM