Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.)
திருவான்மியூர் முதல் - உத்தாண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்தில் உயர்நீதிமன்றம் பணித்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகளுக்கு எப்படி அடிக்கல் நாட்ட முடியும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14.20 கி.மீ தொலைவுக்கு நான்கு வழி உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களை திமுக அரசும், அதன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எவ்வாறு ஏமாற்றி வருகிறார்கள் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும்.
திருவான்மியூருக்கும், உத்தண்டிக்கும் இடையே ரூ.2100 கோடியில் உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த திசம்பர் 24&ஆம் நாள் ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்தப் பணியை கே.என்.ஆர் நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகையை விட ரூ.700 கோடி குறைவான செலவில் முடித்துத் தருவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்த நிலையில், அந்த நிறுவனத்தை நிராகரித்து விட்ட திமுக அரசு, கே.என்.ஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
இதை எதிர்த்து திலிப் பில்ட்காப் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான பணி ஆணை வழங்கத் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்க திமுக அரசு பலமுறை முயன்றும் கூட அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடைசியாக இந்த வழக்கு கடந்த 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது கூட, ஒப்பந்தப்புள்ளி தொடர்பான அரசின் முடிவை எதிர்த்து திலிப் பில்ட்காப் 5 நாள்களில் அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அதன் மீது அடுத்த 10 நாள்களில் அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு முடிவெடுக்கும் வரை பணி ஆணை வழங்கப்படக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதன்படி எந்த முடிவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இத்தகைய சூழலில் பாலத்திற்கான பணிகளை மேற்கொள்ள முடியாது எனும் போது அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது என்பது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். திமுகவின் வழக்கமே ஊழல் செய்வதும், சாத்தியமற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி மக்களை ஏமாற்றுவதும் தான். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். ஆனால், இவற்றில் ஒரே ஒரு திட்டம் கூட திமுக ஆட்சியால் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை.
2011-ஆம் திமுக ஆட்சியின் முடிவில் கடலூர், கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 நகரங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அப்போதைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார். ஆனால், அந்தத் திட்டங்களுக்கு ஒரே ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. அதேபோல் தான் இப்போதும் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்படும் பணிகளுக்கும் ஒரே ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படப் போவதில்லை.
ஊழலையும், மக்களை ஏமாற்றுவதையும் இரு கண்களாகக் கொண்ட திமுக அரசின் கபட நாடகங்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ