Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 26 பிப்ரவரி (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் தொற்று பரவத் தொடங்கியது.
இதன் காரணமாக கேரள- தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் சென்னையில் அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.
இது குறித்து தகவல் அறிந்த கால் நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் உயிரிழந்த காகங்களை மீட்டு போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.
இது தொடர்பான பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், சென்னையில் காகங்களுக்கு H5N1 என்ற பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது தெரிய வந்தது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
இதைத் தொடர்ந்து, சேலத்திலும் மர்மமான முறையில் காகங்கள் உயிரிழந்து கிடந்தன.
இது தொடர்பான மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்தப் பகுதியிலும் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கங்கணாங்குப்பம் ஊராட்சி பகுதியில் சுமார் 50- க்கும் மேற்பட்ட காகங்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தன.
இது குறித்து தகவல் அறிந்த கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் உயிரிழந்த காகங்களை மீட்டு பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால், கடலூர் மாவட்டத்திலும் பறவைகளுக்கு காய்ச்சல் தொற்று பரவியுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் காகங்கள், புறாக்கள், கோழிகள், வாத்துக்கள் உள்ளிட்ட பறவைகள் உயிரிழந்து கிடந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், உயிரிழந்த பறவைகளை தொடக்கூடாது. கோழி பண்ணைகள், வாத்து பண்ணைகள் உள்ளிட்டவற்றில் பணி புரியும் ஊழியர்கள் முக கவசம், கையுறை உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு பணிகளை மேற் கொள்ள வேண்டும்.
பணிகள் முடிந்த பின்னர் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வெளி ஆள்கள் மற்றும் வாகனங்கள் பண்ணைக்கு வருவதை தடை செய்ய வேண்டும்.
பண்ணைகளில் உள்ள பறவைகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த தொற்றானது மனிதர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும், பாதிப்புடைய பறவைகளிடம் பொது மக்கள் ஒதுங்கி இருக்குமாறு கால்நடை பராமரிப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN