கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி நாளை இந்தியா வருகை
புதுடெல்லி, 26 பிப்ரவரி (ஹி.ச.) இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, கனடா பிரதமர் மார்க் கார்னி நாளை முதல் முதல் மார்ச் 2, 2026 வரை தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியாவிற்கு வரவுள்ளார். இந்த பயணம் முக்கியமாக வணிக ஒப்பந்தங்கள், பாது
நாளை முதல் மார்ச் 2 வரை கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை


புதுடெல்லி, 26 பிப்ரவரி (ஹி.ச.)

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, கனடா பிரதமர் மார்க் கார்னி நாளை முதல் முதல் மார்ச் 2, 2026 வரை தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியாவிற்கு வரவுள்ளார்.

இந்த பயணம் முக்கியமாக வணிக ஒப்பந்தங்கள், பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கியது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாளை கனடா பிரதமர் மும்பை நகருக்கு வருகிறார். அடுத்த இரண்டு நாட்களில், அவர் பல்வேறு வணிக சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மேலும், இந்திய மற்றும் கனடிய தலைமை அதிகாரிகள், தொழில் மற்றும் நிதி வல்லுநர்கள், புதுமையான சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள கனடிய ஓய்வூதிய நிதி நிறுவனங்களுடனும் கலந்துரையாடுகிறார்.

கார்னி மார்ச் 1-ஆம் தேதி புதுடெல்லிக்கு செல்கிறார். மார்ச் 2-ஆம் தேதி, இரண்டு நாட்டு பிரதமர்களும் ஹைதராபாத் இல்லத்தில் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரண்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

மேலும், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, முக்கியமான கனிம வளங்கள், விவசாயம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் மக்கள் இடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் தற்போது நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர்.

பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கிய நிகழ்வுகள் பற்றியும் இரண்டு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியும், கார்னியும் அன்றைய தினம் நடைபெற உள்ள இந்தியா-கனடா தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM