பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், வினாத்தாள் குறித்த புகார்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்
சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.) பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், வினாத்தாள் குறித்த புகார்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த 10
Education


சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.)

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், வினாத்தாள் குறித்த புகார்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் வரும் மார்ச் 2 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.

பொதுவாக, பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் தவறாக இருந்தாலோ அல்லது பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்கப்பட்டாலோ தேர்வுக்குழு முடிவின் அடிப்படையில் அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும். தேர்வன்று மாணவர்கள் கேள்வித்தாளில் உள்ள பிரச்சனைகளை ஆசிரியர்கள் மூலம் கூறிய பின்னர் அதுகுறித்து தேர்வுத் துறை ஆய்வு செய்து பின்னர் மதிப்பெண் வழங்கும்.

இந்த நிலையில், தேர்வின்போது கேள்வித்தாள்களில் வந்த வினாக்கள் குறித்து ஏதேனும் கருத்துகள் அல்லது புகார்கள் இருந்தால், அவற்றை மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், பொதுத்தேர்வு வினாத்தாள்களில் குளறுபடிகள் அல்லது தவறுகள் இருப்பதாக கருதினால், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதுகுறித்த விவரங்களை dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் புகார்களை தெரிவிக்கும்போது கேள்வி சரியில்லை எனப் பொதுப்படையாக குறிப்பிடாமல் கேள்வி எண், அதில் என்ன தவறு உள்ளது என்பனவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும் கருத்துகளை தேர்வு நடைபெற்ற அன்றைய தினமே அனுப்ப வேண்டும் என்றும், மின்னஞ்சல் தவிர்த்து பெறப்படும் மற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN