பிரதமர் மோடிக்கு நெசெட்டின் சபாநாயகர் பதக்கம் வழங்கிய இஸ்ரேல் பாராளுமன்றம்
ஜெருசலேம், 26 பிப்ரவரி (ஹி.ச.) இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் மோடி நேற்று இஸ்ரேல் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். புது டெல்லியிலிருந்து நேற்று காலை சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, மாலை 4.30 மணியளவில் இஸ்ரேல் சென்றடைந்தார
பிரதமர் மோடிக்கு நெசெட்டின் சபாநாயகர் பதக்கம் வழங்கிய இஸ்ரேல் பாராளுமன்றம்


ஜெருசலேம், 26 பிப்ரவரி (ஹி.ச.)

இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் மோடி நேற்று இஸ்ரேல் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.

புது டெல்லியிலிருந்து நேற்று காலை சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, மாலை 4.30 மணியளவில் இஸ்ரேல் சென்றடைந்தார்.

இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்திற்கே நேரடியாக வந்து வரவேற்றார்.

பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவருடைய துணைவியார் சாராவும் உடனிருந்தார். பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் இது இரண்டாவது முறையாகும்.

பின்பு, பிரதமர் மோடிக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரு நாட்டு பிரதமர்களும் விமான நிலையத்திலேயே தனிப்பட்ட முறையில் சந்தித்து கலந்துரையாடினர்.

குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புதுமை, விவசாயம், நீர் மேலாண்மை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வணிகம் மற்றும் முதலீடு, மக்கள் இடையேயான நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இதன் பின்னர், பிரதமர் மோடி நேற்று மாலை அந்த நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்பொழுது கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை சுட்டிக்காட்டிப் பேசினார்.

இது தொடர்பாக தனது உரையின் போது,

140 கோடி இந்தியர்களின் நல்வாழ்த்துக்கள் மற்றும் நட்புறவு, மதிப்பளித்தலின் செய்தியை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூரமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அதனால் ஏற்பட்ட உங்களுடைய வேதனையை நாங்களும் உணர்ந்தோம். உங்களுடைய துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். பொதுமக்களை கொல்வதையும், பயங்கரவாதத்தையும் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. இந்த தருணத்தில் இந்தியா முழு மனதுடன் இஸ்ரேலுடன் உறுதியாக துணை நிற்கிறது.

மும்பையில் இஸ்ரேல் குடிமக்கள் உட்பட அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் நினைவு கூறுகிறோம். உங்களைப் போலவே நாங்களும் பயங்கரவாதத்திற்கு எதிரான, விட்டுக்கொடுக்காத கொள்கையை கடைப்பிடிக்கிறோம். சமூகங்களை சீர்குலைத்து, முன்னேற்றத்தை தடுத்து, நம்பிக்கையை சிதைப்பதையே பயங்கரவாதம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதனை எதிர்கொள்ள உலகளாவிய செயல்பாடு அவசியம்.

ஆகையினால்தான் காசா அமைதி திட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த அமைதி திட்டம் சமாதானத்துக்கான பாதையை வழங்குகிறது. அது பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பது உட்பட, இந்த பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் நியாயமான மற்றும் நிலையான அமைதியை உறுதி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நமது அனைத்து முயற்சிகளும் ஞானம், தைரியம் மற்றும் மனிதநேயத்தால் வழிநடத்தப்படட்டும். அமைதிக்கான பாதை எப்போதும் எளிதானது அல்ல, ஆனால் இந்த பிராந்தியத்தில் உரையாடல், அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக இந்தியா உங்களுடனும் உலகத்துடனும் இணைகிறது.

என்று அவர் கூறினார்.

இந்த உரைக்கு பிறகு பிரதமர் மோடிக்கு 'நெசெட் சபாநாயகர்' பதக்கம் வழங்கப்பட்டது. இதனை அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் அமீர் ஓஹானா வழங்கினார்.

இஸ்ரேல் பாராளுமன்றத்தின் உயரிய இந்த பதக்கத்தை பெறும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். அதுபோல இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமரும் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா-ஈரான் இடையே நீடிக்கும் போர் பதற்றம் போன்ற பிரச்சினைகளால் மத்திய கிழக்கில் நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM