Enter your Email Address to subscribe to our newsletters

புவனேஸ்வர்,26 பிப்ரவரி (ஹி.ச.)
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியில் வசிக்கும் ரேணு என்கிற அன்வேஷ், ஒடிசாவில் மாவோயிஸ்டுகளின் மண்டல தளபதியாக செயல்பட்டு வந்தார்.
இவர் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.22 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம், காவல் துறையிடம் சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அரசு பாதுகாத்து வருகிறது.
சாதாரண வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புவதற்கு அரசு பொருளாதார உதவியும் செய்து வருகிறது. இதன் காரணமாக அன்வேஷ் போலீசில் சரணடைய விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதையறிந்த மாவோயிஸ்டு தலைவன் சுக்ரு, சரணடைய வேண்டாம் என்று அன்வேஷை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், மாவோயிஸ்டு இயக்கத்திலிருந்து வெளியேறி போலீசில் சரணடைவதற்கு அன்வேஷ் தயாராகியுள்ளார்.
அப்போது, சிலா மற்றும் ஜகேஷ் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சுக்ரு, அன்வேஷை தடுத்து நிறுத்த முயற்சித்தார். அன்வேஷ் அதற்கு சம்மதிக்காததால், மூன்று பேரும் சேர்ந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பிறகு, உடலை மறைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று போலீசாரால் நம்பப்படுகிறது.
இதில், ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கடந்த 22-ம் தேதி பாதுகாப்புப் படையினருடனான சண்டையில் ஜகேஷ் கொல்லப்பட்டார்.
சரணடைவது குறித்து மாவோயிஸ்டுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அன்வேஷின் உடலை பகாரி வனப்பகுதியில் இருந்து ஒடிசா போலீசார் நேற்று வெளியே எடுத்தனர்.
Hindusthan Samachar / JANAKI RAM