Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 26 பிப்ரவரி (ஹி.ச.)
கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை மாசி மகாமகமும், ஆண்டுதோறும் மாசி மக விழாவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவின் போது, இங்குள்ள மகாமகம், பொற்றாமரை குளங்கள், காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி, அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டு பின்னர் வீடுகளுக்குச் செல்வார்கள்.
கும்பகோணம் மகாமகம் குளத்தில் நடைபெறும் மாசி மகத்தின் போது ஆயிரக்கணக்கானோரும், மாசி மகாமகத்தின் போது லட்சக்கணக்கானோரும் கூடுவார்கள்.
மாசி மக நாளன்று மகாமக குளத்தின் கரையில் சிவன்கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கும்பகோணம் பகுதிகளில் உள்ள காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி வருகிற 2-ந்தேதி மகாமக குளத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், மாசி மகத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்துக்கு வருகிற மார்ச் 2-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து, ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, மார்ச்
14-ந் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b