Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச)
தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
மாநிலங்களவை பொறுத்தவரையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள் உள்ளன.
இவை சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும்.
அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, என்.ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே. வாசன் உள்ளிட்ட ஆறு பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி நிறைவடைகிறது.
காலியாகும் இடங்களுக்கான தேர்தல் தேதி அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கி மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
மார்ச்-9 ஆம் தேதி வரை மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால் மார்ச் மாதம்-16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 20 ஆம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.
இந்த மாநிலங்களவை தேர்தலில் 34 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க இயலும். அத்தகைய சூழ்நிலையில், திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் மீண்டும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலங்களவை தேர்தலுக்காக, தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் சாந்தி தேர்தல் நடத்தும் அலுவலராகவும், பேரவைச் செயலகத்தின் இணைச் செயலாளர் தேன்மொழி உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
வேட்பு மனுக்களை உரிய ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று முதல் மார்ச் 5 வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் பொருட்டு வேட்புமனு தாக்கல் செய்தார்.
அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேர்தல் மன்னன் பத்மராஜன், தற்போது 252-வது முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இது போன்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், இரண்டு கட்சிகளிலும் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN