கேரளா பெண் மந்திரி மீது தாக்குதல் - மாணவர் காங்கிரசார் ஐந்து பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு
கண்ணூர், 26 பிப்ரவரி (ஹி.ச.) கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற சர்வதேச ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று தொடங்கி வைத்து உரையாற்றினார். பின்னர் அவர் திருவனந்தபுரம் போவதற்காக கண்ணூர் ரெயில் நிலையத்துக்குப் பக
கேரளா பெண் மந்திரி மீது தாக்குதல் - மாணவர் காங்கிரசார் ஐந்து பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு


கண்ணூர், 26 பிப்ரவரி (ஹி.ச.)

கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற சர்வதேச ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பின்னர் அவர் திருவனந்தபுரம் போவதற்காக கண்ணூர் ரெயில் நிலையத்துக்குப் பகல் வேளையில் வந்தார்.

அவர் வந்தே பாரத் ரெயிலில் செல்வதற்காக உள்ளே சென்றபோது, அந்த சமயத்தில் அங்கு வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கண்ணூர் மாவட்ட மாணவர் அமைப்பின் தலைவர் தலைமையில், மாணவர் அணியினர், இளைஞர் அணியைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த நேரத்தில், போராட்டம் செய்தவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, அமைச்சர் வீணா ஜார்ஜ் காயமடைந்ததால் கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மந்திரியைத் தாக்கிய காங்கிரஸ் இளைஞர் அணியினரின் செயல் ஏற்கத்தக்கது அல்ல, வருந்தத்தக்கது என்று முதல்-அமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில், கண்ணூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அமைச்சர் வீணா ஜர்ஜ் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சிகிச்சை பெற்றார்.

அதன் பின்னர் மாலை 8 மணியளவில் மருத்துவமனையில் இருந்து மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. முதலில் அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.

இருப்பினும், கழுத்தில் அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பதற்கான முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கோவிந்தன் சொல்லும்போது, மாணவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரைத் தாக்கினார்கள். ஆகையால், மாநிலம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய கண்ணூர் மாவட்ட தலைவர் அதுல், பொருளாளர் அக்சய் மிட்டல் மற்றும் முபாஸ், பிதுல் பாலன் மற்றும் முகமது யாசின் உள்ளிட்ட ஐந்து பேர் மீது கண்ணூர் நகர காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அவர்கள், அமைச்சர் வீணா ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனாலும் அவர்கள் மேலும் முன்னேறி செல்லாதபடி உடனே காவல்துறையினர் தடுத்து நிறுத்திவிட்டனர்.

அவரை யாரும் நெருங்காதபடி போராட்டக்காரர்களைத் தனியாக அழைத்துச் சென்றார்கள். அதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், சட்டத்தை மீறிய செயல்களுக்காகவும் ரயில்வே காவல்துறையினரும் அவர்களிடம் விசாரணை செய்ய உள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM