Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 பிப்ரவரி (ஹி.ச.)
8-ம் வகுப்பு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்சிஇஆர்டி) பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் உள்ள கருத்துக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடுமையாக எதிர்த்தார்.
நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் தனது எதிர்ப்பை பதிவு செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிமன்றத்தை அவமதிக்க நினைப்பவர்களை எப்படி கையாள வேண்டும் என்று தனக்குத் தெரியும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும், இது ஒரு திட்டமிட்ட சதி போல் தெரிவதாகவும் கூறினார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து என்சிஇஆர்டி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டது.
அதில், 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறை பற்றி தவறான தகவல்கள் இடம் பெற்றது ஒரு எதிர்பாராத தவறு என்றும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினர்.
நீதித்துறையை மதிப்பதாகவும், அந்த பாடம் முழுவதுமாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டுக்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு மன்னிப்பு கேட்டது.
நீதித்துறை ஊழல் பாடத்தை புத்தகத்தில் சேர்த்தவர் தண்டனையை ஏற்றுக்கொள்வார் என்று அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா விளக்கம் அளித்தார்.
பாடத்திட்டம் முழுவதும் மாற்றப்படும் என்றும், இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இனி அந்த வேலையில் தொடர மாட்டார்கள் என்றும் துஷார் மேத்தா உறுதியளித்தார்.
இதன் காரணமாக, நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் வெளிவந்த என்சிஇஆர்டி-யின் எட்டாம் வகுப்பு பாடத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
நீதித்துறை ஊழல் என்ற பாடம் மூலம் நீதித்துறை மீது துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்தம் சொட்டுகிறது என்று கண்டித்த தலைமை நீதிபதி, பாடப்புத்தகம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / JANAKI RAM