விழுப்புரத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிப்பு
விழுப்புரம், 26 பிப்ரவரி (ஹி.ச.) விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் அண்மையில் மரக்காணம் அருகே உள்ள குரும்பரம், செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூர் ஆகிய பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் காலத்தைச் சேர்ந்த (1200
Kottravai


விழுப்புரம், 26 பிப்ரவரி (ஹி.ச.)

விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் அண்மையில் மரக்காணம் அருகே உள்ள குரும்பரம், செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூர் ஆகிய பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் காலத்தைச் சேர்ந்த (1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த) கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுபற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில்,

குரும்பரம் வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள விளைநிலத்தில் பலகைக் கல்லால் ஆன கொற்றவை சிற்பம் காணப்படுகிறது.

எட்டு கரங்களுடன் எருமைத் தலைமீது நின்றிருக்கிறார். அழகான முக அமைப்பு, ஆடை அணிகலன்களுடன் கொற்றவை காட்சி தருகிறார். முன் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் தொடை மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன.

சிற்பத்தின் இடதுபக்கம் கொற்றவையின் வாகனமான மான் நிற்கிறது. கால்களுக்குக் கீழே தலைப்பலி வீரனும், பூஜை செய்யும் அடியவரும் அமர்ந்து இருக்கின்றனர்.

அதேபோல் செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூர் கிராமத்தில் சமணக் கோயில்கள், சமணர் மடம் ஆகியவை அமைந்துள்ளன.

இங்குள்ள ஏரிக்கரை மற்றும் சுடுகாட்டிற்கு மத்தியில் கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது. முன் இரண்டு கரங்களும் தொடை மீது வைத்த நிலையிலும், பின் வலக்கரங்களில் நீண்ட சூலாயுதம், பிரயோகச் சக்கரம் காணப்படுவதும் சிறப்பிற்கு உரியதாகும்.

சிற்பத்தின் மேல் இடது மூலையில் சிறிய மான் இடம் பெற்றுள்ளது. இடது கால் நேராக நிற்க, வலது காலை சற்று மடக்கியும், மெலிந்த இடையுடனும் கொற்றவை நளினமாக நிற்கிறார்.

முழங்கால் கீழே மண்ணில் புதைந்திருக்கிறது. இதனால் தலைப்பலி வீரன் அடியவர் உருவங்களை முழுமையாகக் காண இயலவில்லை.

மேற்காணும் இரண்டு சிற்பங்களும் பல்லவர் காலத்தைச் (கி.பி.8ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவை ஆகும். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இந்த சிற்பம் வானமே கூரையாக திறந்த வெளியில் நின்றுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே பல இடங்களில் கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கொற்றவை வழிபாடு இந்த மாவட்டத்தில் சிறப்பாக இருந்திருக்கிறது.

ஆயிரம், ஆண்டுகளைக் கடந்து இன்றும் தொடர்கிறது என்பதற்கு குரும்பரம், மேல்சித்தாமூர் சிற்பங்கள் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன என கூறினார்.

இந்த ஆய்வின் போது பிடாகம் ப.தமிழழகன், புதுச்சேரி எம்.நீலமேகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN