Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக,
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். அந்தப் பதிவில்,
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்து விடுதலை செய்திருப்பது, உண்மையின் வெற்றியாகும். பொய் வழக்கு பதிவு செய்யும் ஒன்றிய அரசுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
2021-22ஆம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த மதுபானக் கொள்கை தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, மத்திய புலனாய்வு அமைப்பின் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
.ஆனால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் மூலம் தேர்தல் நேரத்தில் அரசியல் பழிவாங்கல் நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து, அவர்களின் அரசியல் செயல்பாடுகளைத் தடுக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது.
உண்மைக்கு புறம்பான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை பிடுங்கி அவரையும் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்திய ஒன்றிய பாஜக அரசுக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி தான் இந்த தீர்ப்பு
ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா அரசு, விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளாக சட்டத்தின் ஆட்சி, அரசியல் சமத்துவம் மற்றும் எதிர்க்கட்சிகளின் உரிமைகள் ஆகியவற்றை மதிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும்.
இந்த தீர்ப்பு, அரசியல் பழிவாங்கலுக்கு எதிரான நீதியின் வலுவான பதிலாகவும், ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு எல்லா அரசுகளுக்கும் உள்ளது என்பதை இந்த தீர்ப்பு வலுப்படுத்துகிறது என்று தெரிவித்து உள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN