Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
ஃபர்ஸ்ட் காபி புரொடக்சன்ஸ் சார்பில் மாலா மணியன் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சிறகு’
கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இவர் தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர்.
‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, கோவையைச் சேர்ந்த அக்ஷிதா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
நிவாஸ், வித்யா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரோல் குரோலி இசையமைக்க, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜா பட்டச்சார்ஜி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அருண்குமார் வி.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
‘சிறகு’ படம் குறித்து தயாரிப்பாளர் மாலா மணியன் கூறும் போது,
எந்த காலத்திற்கும் ஏற்ற ஒரு கதை அம்சத்துடன் தான் இந்த படம் உருவாகியுள்ளது.
பயணம், இசை மற்றும் உறவுகளை மையப்படுத்தி ஒரு ஃபீல் குட் படமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து பார்த்து ரசிக்கும் விதமாக இப்படம் உருவாகி இருக்கிறது.
க்ரவுட் ஃபண்டிங் போல ‘பிரண்ட்ஸ் ஃபண்டிங்’ என்று சொல்லும் விதமாக இந்த படத்தை நண்பர்கள் உதவியுடன் தான் தயாரித்திருக்கிறேன்.
இப்படி ஒரு படம் உருவாகி இருக்கிறது என்பது மக்களுக்கு முதலில் தெரிய வேண்டும்.
அதற்காக ஏற்கனவே சென்னையில் 5 முறை பொதுமக்கள் பார்வைக்காக இப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு தயாரிப்பு நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவை பதிவேற்றப்பட்டுள்ளன.
இதை அடுத்து உலக மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி (ஞாயிறு) மதுரையில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் மாலை 6 மணிக்கு ஒரு சிறப்பு பிரீமியர் காட்சியை திரையிட இருக்கிறோம்.
இந்த சிறப்பு காட்சியில் பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள், சமூக ஊடகவியலார்கள் என பல தரப்பட்ட நபர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் சிறப்பு காட்சியில் இயக்குநர் குட்டி ரேவதி, நாயகி அக்ஷிதா, தயாரிப்பாளரான நான் என மூன்று பெண்களுமே கலந்து கொள்கிறோம்.
2023ல் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிறகு’ படம் கலந்து கொண்டு சிறந்த முதல் தயாரிப்பாளர், சிறந்த அறிமுக கதாநாயகி என இரண்டு பரிசுகளை பெற்றது.
அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது என்று கூறினார்.
Hindusthan Samachar / Durai.J